காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், புதிய சர்வதேச கடல் பயணத்தை முன்னெடுத்து வருவதாக ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா கூட்டணி (Freedom Flotilla Coalition – FFC) அறிவித்துள்ளது.
காஸா கடற்கரையை சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ள இந்தப் பயணத்தில் பங்கேற்கும் கப்பல்கள், ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் காஸாவை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளதாக கூட்டணி தெரிவித்துள்ளது.
“இஸ்ரேலின் சட்டவிரோதமானதும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதுமான காஸா முற்றுகைக்கு சவால் விடுப்பதே” இந்தப் பயணத்தின் நோக்கம் என FFC தெரிவித்துள்ளது.
முன்னதாக ஃப்ளோட்டில்லா தன்னார்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது இஸ்ரேலிய படையினர் வன்முறையைப் பயன்படுத்தியதாகவும், கடுமையான தாக்குதல்கள், மீண்டும் மீண்டும் மின்சாரம் பாய்ச்சுதல் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது.
2025 ஒக்டோபரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் உலகின் பெரும்பாலான பகுதிகள் காஸா விவகாரத்தில் இருந்து கவனத்தைத் திருப்பியுள்ளதாகவும், எனவே தற்போதைய சூழலில் நடவடிக்கை முன்னெடுப்பது முன்னெப்போதையும் விட அவசியமானது என்றும் FFC தெரிவித்துள்ளது.
இதன்படி, இரண்டு கப்பல்கள் ஏற்கனவே பயணத்தை ஆரம்பித்துள்ளன. Handala II என்ற கப்பல் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஸ்காண்டிநேவியாவைச் சுற்றிப் பயணித்து நோர்வே, ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் துறைமுக நிறுத்தங்களை மேற்கொண்டுள்ளது.
மற்றொரு கப்பலான Kate, இம்மாத தொடக்கத்தில் பிரித்தானியாவின் பிரிஸ்டல் நகரில் இருந்து புறப்பட்டு, இதுவரை அயர்லாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் துறைமுகங்களுக்குச் சென்றுள்ளது.
மேலும் ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் துறைமுக நிறுத்தங்களை மேற்கொண்ட பின்னர், கப்பல்கள் காஸாவை நோக்கிப் பயணத்தைத் தொடரும் என FFC தெரிவித்துள்ளது.






3 Comments