போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குதல்கள் நபாத்தியே, அரப் சலீம், நபாத்தியே அல்-ஃபவ்கா மற்றும் கஃபர் ரெமான் உள்ளிட்ட பகுதிகளை இலக்காகக் கொண்டதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரப் சலீம் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் படைகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இரு பெண்கள் உயிரிழந்ததுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
நபாத்தியே அல்-ஃபவ்கா பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நபாத்தியே நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் லெபனான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரருக்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் ஒன்று முற்றாக சேதமடைந்ததுடன், அருகிலிருந்த பல கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.
கஃபர் ரெமானில், அந்த நகரின் மறைந்த முன்னாள் மேயருக்குச் சொந்தமான வீடு வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த 5 பேர் நபாத்தியே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று பின்னர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், நபாத்தியே நகரில் உள்ள செய்யிதா மசூமா பூங்காவும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. முந்தைய நாளில் தாக்கப்பட்டிருந்த அந்த நகராட்சி பூங்காவின் எஞ்சிய பகுதிகளும் புதிய தாக்குதலில் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு லெபனானில் தமது படைகளை நோக்கி ஹிஸ்புல்லா இரண்டு ட்ரோன்களை ஏவியதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லாவின் நடவடிக்கையை “அப்பட்டமான மீறல்” என இஸ்ரேல் வர்ணித்துள்ளது கடந்த மார்ச் மாதம், ஈரானுக்கு எதிரான அமெரிக்கா–இஸ்ரேல் போரின் போது ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் லெபனான் முழுவதும் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதுடன், தரைவழி இராணுவ நடவடிக்கையையும் ஆரம்பித்தது.
அதன் பின்னர் இடம்பெற்ற தாக்குதல்களில் 4,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது இந்நிலையில், லெபனான் எல்லைக்குள் சுமார் 10 கிலோமீற்றர் ஆழமான பகுதியை “பாதுகாப்பு வலயம்” என சுயமாக வரையறுத்துள்ள இஸ்ரேல் படைகள், அந்தப் பகுதியில் தொடர்ந்து நிலைகொண்டுள்ளன.






3 Comments