உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்காவின் புதிய முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முக்கிய பேச்சுவார்த்தை தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்தித்துள்ளனர்.
கிரெம்ளின் வெளியிட்ட காணொளியில், விட்காஃப் மற்றும் குஷ்னரை புடின் வரவேற்பது இடம்பெற்றுள்ளது. தற்போதைய நிலைமை எளிதானதாக இல்லை எனக் குறிப்பிட்ட புடின், உக்ரைன் போர் தொடர்பான ரஷ்யாவின் நிலைப்பாட்டை அமெரிக்கத் தூதர்களிடம் விளக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா தங்களது தலைநகரங்கள் மீது மூன்று நாட்களுக்கு தாக்குதல் நடத்துவதை நிறுத்த ஒப்புக்கொண்டதற்கு புடினுக்கு விட்காஃப் நன்றி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதர்கள் ஞாயிற்றுக்கிழமை கீவ் சென்று உக்ரைன் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
“போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு முன்மொழிவை” விட்காஃப் மற்றும் குஷ்னர் தங்களுடன் கொண்டு வருவதாக ட்ரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார். கடந்த 18 மாதங்களாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மேற்கொண்ட சமாதான முயற்சிகளில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.
மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்க தூதர்களுடன் பணியாற்றுவதில் தாம் வசதியாக இருப்பதாக புடின் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்பின் சமாதான முயற்சிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அரசு ஊடகங்களின்படி, கிரெம்ளினில் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமார் மூன்று மணி நேரம் நீடித்துள்ளது.
இதனிடையே, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, அமெரிக்கத் தூதர்களுடன் ஏற்கனவே பேசியுள்ளதாகவும், அவர்கள் ரஷ்யத் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்கக் குழுவுடன் கீவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை மாஸ்கோ மீது தாக்குதல் நடத்துவதை உக்ரைன் தவிர்க்கத் தயாராக இருப்பதாகவும், ரஷ்யாவும் கீவ் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எனினும், ரஷ்யா உக்ரைன் முழுவதும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கீவ் மீது மூன்று நாட்களுக்கு தாக்குதல்களை நிறுத்துவதற்கு மட்டுமே புடின் உத்தரவிட்டதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், அமெரிக்கத் தூதர்களின் வருகைக்கு முன்னதாக கீவ் மற்றும் போரிஸ்பில் விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு ரஷ்யா “குறிப்பிடத்தக்க” தாக்குதல்களை நடத்தியதாக ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். உக்ரைன் வான்வெளி 2022ஆம் ஆண்டு ரஷ்யாவின் முழுமையான படையெடுப்புக்குப் பின்னர் மூடப்பட்டுள்ளதால், அமெரிக்கத் தூதர்கள் மாஸ்கோவிலிருந்து கீவுக்கு எவ்வாறு பயணிக்க உள்ளனர் என்பது தெளிவாகவில்லை.
போர் தொடரும் நிலையில் ரஷ்யாவும் உக்ரைனும் அண்மைய மாதங்களில் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. பிரதேச உரிமை மற்றும் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் இரு தரப்புக்கும் இடையே இன்னும் கருத்து வேறுபாடுகள் நீடிப்பதால் புதிய அமெரிக்க சமாதான முயற்சி வெற்றியடையுமா என்பது கவனத்திற்குரியதாகியுள்ளது.






3 Comments