யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், மேற்கு செங்கடல் கடற்கரைப் பகுதிகளிலும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கிய செய்தி நிறுவமான அனடோலுவின் தகவலின்படி, ஹொதைதா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹைஸ் மாவட்டத்தை அரசாங்கப் படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளன. ஹொதைதா, தாயிஸ் மற்றும் இப் ஆகிய மாகாணங்களை இணைக்கும் முக்கியப் பகுதியாக ஹைஸ் காணப்படுகிறது.
இதனிடையே, யேமனின் ஜனாதிபதி தலைமைச் சபையின் தலைவர் ரஷாத் அல்-அலிமி, நாட்டின் முழு நிலப்பரப்பிலும் மீண்டும் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் திறன் யேமன் ஆயுதப் படைகளுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்களது நடவடிக்கைகளுக்கான “விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என அவர் எச்சரித்துள்ளார்.
“தாயிஸ், ஹவுதிகளின் ஆதரவாளர்களுக்கான பாதையாக இருக்காது” எனவும் அல்-அலிமி குறிப்பிட்டுள்ளார். இது ஹவுதிகளுக்கு ஈரான் வழங்குவதாகக் கூறப்படும் ஆதரவை மறைமுகமாகக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஹவுதிகளின் “தவறான கணிப்புகள்” இறுதியில் அவர்களின் “முழுமையான வீழ்ச்சிக்கு” வழிவகுக்கும் என்றும் அல்-அலிமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன் மூலம், யேமனில் அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான நீண்டகால மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு கடற்கரைப் பகுதிகளின் கட்டுப்பாட்டை கைப்பற்றுவதற்கான போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.






3 Comments