சூடானின் தெற்கு கோர்டோபான் மாகாணத்தில் உள்ள டில்லிங் நகரின் குடியிருப்பு பகுதிகளை நோக்கி நடத்தப்பட்ட பீரங்கி தாக்குதலில், குழந்தை உட்பட குறைந்தது 5 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை சூடான் மக்கள் விடுதலை இயக்கம்–வடக்கு (SPLM-N) நடத்தியதாக சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடத்தப்பட்ட இந்த கடுமையான தாக்குதல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் தெளிவான மீறல் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதல் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததுடன், ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள சூடானின் மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்கு, SPLM-N இன் அப்தெல் அசீஸ் அல்-ஹிலு தலைமையிலான அணிக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு வலியுறுத்தியுள்ளது.
SPLM-N என்பது SPLM இயக்கத்திலிருந்து பிரிந்த ஆயுதக் குழுவாகும். அதன் தலைவர் அப்தெல் அசீஸ் அல்-ஹிலு, சூடானில் செயல்படும் துணை இராணுவப் படையான விரைவு ஆதரவுப் படையுடன் (RSF) தனது படைகளை இணைத்துள்ளதாகவும், RSF தலைமையிலான இணை அரசாங்கத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments