யுக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில், அமெரிக்காவின் சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த வார இறுதியில் யுக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், மொஸ்கோ மற்றும் கீவ் நகரங்களுக்கு செல்லவுள்ள இரு அமெரிக்கத் தூதர்களும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய அமைதித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் எனத் தெரிவித்தார்.
இதனிடையே, அமெரிக்கத் தூதர்களின் பயணத்திற்கு முன்னதாக யுக்ரைனின் பாதுகாப்புச் சேவை தலைமையகத்தை இலக்காகக் கொண்டு ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோருக்கு இடையேயான கடுமையான தனிப்பட்ட பகைமை, அமைதி ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முக்கிய தடையாக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் போரில் இருதரப்பிலும் பெருமளவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யா தரப்பில் சுமார் 450,000 பேரும், யுக்ரைன் தரப்பில் 125,000 முதல் 150,000 பேரும் உயிரிழந்திருக்கலாம் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
புதிய அமெரிக்க முயற்சி மூலம் இருதரப்புக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, நீண்டகாலமாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு உருவாகுமா என்பது சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






3 Comments