ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், அமெரிக்க பேச்சுவார்த்தைக் குழுவினர் உக்ரைனுக்குச் செல்வது குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கக் குழுவினர் உக்ரைன் தலைநகர் கீவுக்கு செப்டெம்பர் 6ஆம் தேதி செல்லக்கூடும் என இந்த விவகாரம் குறித்து அறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தப் பயணம் இடம்பெற்றால், அமெரிக்க பேச்சுவார்த்தைக் குழுவினரின் கீவுக்கான முதல் விஜயமாக அது அமையும்.
எனினும், அமெரிக்க அதிகாரிகள் கீவுக்குச் செல்வதை ரஷ்யா விரும்பவில்லை என்றும், திட்டத்தை மாற்றுமாறு அமெரிக்க தரப்புக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாகவும் அந்தத் தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சுமார் நான்கரை ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா–உக்ரைன் போருக்கு முடிவு காண்பதில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் மிகப்பெரிய கருத்து வேறுபாடு நிலவுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்றுள்ள மிகக் கொடிய மோதல்களில் ஒன்றாக இந்தப் போர் கருதப்படுகிறது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் உள்ள மேலும் சில பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், உக்ரைன் அவ்வாறான நிபந்தனைகளை ஏற்க மறுத்து வருகிறது. அவை நாட்டின் சரணடைவுக்கு ஒப்பானதாக இருக்கும் என உக்ரைன் கருதுகிறது.
இதனால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச முயற்சிகள் தொடர்ந்தாலும், பிராந்தியக் கட்டுப்பாடு தொடர்பான அடிப்படை விவகாரத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.






3 Comments