யேமனில் பல ஆண்டுகளாக ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்த முன்களப் பகுதிகளில் மீண்டும் கடுமையான மோதல்கள் வெடித்துள்ள நிலையில், ஏற்கனவே போரினால் இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தென்மேற்கு யேமனில் உள்ள ஜபல் ஹபாஷி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும், தொடர்ந்து கடுமையான சண்டை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூதி படையினர் அல்-ரஹாபா பகுதியை நோக்கி முன்னேறியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் தங்கியிருந்த சயீத் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மீண்டும் பாதுகாப்பான இடங்களைத் தேடி வெளியேறியுள்ளனர்.
மோதல் திடீரென இரவு நேரத்தில் ஆரம்பித்ததாக சயீத் தெரிவித்துள்ளார். போர்க்களத்திலிருந்து தாங்கள் தொலைவில் இருந்தபோதிலும், மறுநாள் காலையில் தங்களது முகாமுக்கு அருகிலேயே மோதல் முனைகள் வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறினார்.
2022ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதலின்போது தாங்கள் இரு தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இடையில் சிக்கியிருந்ததாகவும், மீண்டும் அதே நிலையை எதிர்கொள்ள விரும்பாததால் அடிப்படைப் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு முகாமைவிட்டு வெளியேறியதாகவும் அவர் தெரிவித்தார்.
சயீத் தங்கியிருந்த முகாமில் இருந்து மட்டும் குடும்பங்கள் வெளியேறவில்லை. அருகிலுள்ள பிற இடம்பெயர்ந்தோர் முகாம்கள் மற்றும் கிராமங்களில் வசித்த மக்களும் பாதுகாப்பு கருதி வெளியேறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது மற்றொரு இடம்பெயர்ந்தோர் முகாமில் உறவினர்களுடன் தங்கியுள்ள சயீத், தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுக்காக அனைவரும் கடுமையான தேவையை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
யேமனின் முன்களப் பகுதிகளில் சுமார் நான்கு ஆண்டுகளாக நிலவிய அமைதியின் காரணமாக, ஒரு நாள் தனது சொந்த ஊரான மக்பனாவுக்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கையுடன் சயீத் இருந்துள்ளார்.
ஆனால் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் யேமன் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான முழுமையான போர் மீண்டும் வெடிக்கும் சாத்தியம் அதிகரித்து வரும் நிலையில், தனது சொந்த ஊருக்குத் திரும்புவதைவிட, குறைந்தபட்சம் தங்குமிடம், குடிநீர் மற்றும் பழக்கமான சூழலை வழங்கிய அல்-ரஹாபாவுக்காவது மீண்டும் செல்ல முடிந்தால் போதும் என்ற நிலைக்கு தான் வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.






3 Comments