அமெரிக்காவின் நியூயோர்க் நகர பொதுப் பாடசாலைகளில் 8ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
சுமார் 900,000 மாணவர்களைக் கொண்ட நியூயோர்க் நகர பொதுப் பாடசாலை அமைப்பில் தொழில்நுட்பப் பயன்பாட்டை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புதிய விதிமுறைகள் அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் AI பயன்பாடு கட்டுப்படுத்தப்படும். பொதுவாக 13 அல்லது 14 வயதுக்குட்பட்ட மாணவர்களை உள்ளடக்கும் இந்தப் பிரிவில், AI கருவிகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.
அதேவேளை, 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வகுப்பறைகளில் மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளைப் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளன.
9ஆம் வகுப்பு முதல் உயர்நிலைப் பாடசாலை மாணவர்களுக்கு AI பயன்பாடு அனுமதிக்கப்படும். எனினும், AI தொழில்நுட்பம் தொடர்பான கல்வி உள்ளிட்ட குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே அதன் பயன்பாடு வரையறுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பாடங்களைத் தயாரித்தல் மற்றும் செய்திகளை எழுதுதல் போன்ற பணிகளுக்கு AI தொழில்நுட்பத்தை தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆனால், மாணவர்களின் கல்விப் பணிகளை மதிப்பீடு செய்வதற்கு AI பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வியில் AI மீது அதிகளவில் சார்ந்திருப்பது சுய சிந்தனை மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வெளியாகியுள்ள பல்வேறு அறிக்கைகளுக்கு மத்தியில் நியூயோர்க் நகர நிர்வாகம் இந்த புதிய தொழில்நுட்பக் கொள்கையை முன்னெடுத்துள்ளது.






3 Comments