ஈரான் மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் நேரடியாகச் சந்திப்பார்களா என்பது குறித்து இரு தரப்புகளும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதால், இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை உருவாகியுள்ளது என BBC செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய அரச ஊடகமான IRIB, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானில் அமெரிக்கப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் எந்தத் திட்டமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
“ஈரான்–பாகிஸ்தான் இருதரப்பு உறவுகள் குறித்த விவாதங்களுக்காகவே அவர் இஸ்லாமாபாத் சென்றுள்ளார். மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு ‘பாலம்’ போன்று செயல்படும்” என ஈரான் தரப்பு விளக்கமளித்துள்ளது.
மறுபுறம், அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு வெளியிட்ட தகவலின்படி, டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் விசேட தூதுவர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர், ஈரான் தரப்பினர் நேரடி பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்ததன் பேரிலேயே இஸ்லாமாபாத்துக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ABC News வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க மற்றும் ஈரானிய பிரதிநிதிகள் இந்த வார இறுதியில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தனித்தனியாகச் சந்திப்புகளை நடத்தவுள்ளனர்.
இந்த ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமைந்தால் மட்டுமே, ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க மற்றும் ஈரானிய தரப்புகளுக்கிடையே நேரடி சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தொடர்பாக இன்னும் தெளிவான முடிவு எட்டப்படாத நிலையில், இரு தரப்புகளின் நிலைப்பாடுகள் உலக அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளன.






3 Comments