வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் (FCRA) திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக 31 பேர் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெளிநாட்டு நிதி மற்றும் பங்களிப்புகளை ஒழுங்குபடுத்தும் வகையில், கடந்த 1976ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சியில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் கொண்டுவரப்பட்டது.
பின்னர், 2010ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் இந்தச் சட்டத்தில் கடுமையான விதிமுறைகள் சேர்க்கப்பட்டன. தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், சட்டத்தில் மேலும் மூன்று முக்கிய திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் மக்களவையில் திருத்த மசோதாவை தாக்கல் செய்தது.
கடந்த மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு நேற்று அமைக்கப்பட்டது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ஜெய்ஸ்வால் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழு எஃப்.சி.ஆர்.ஏ. சட்டத் திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்களை விரிவாக ஆய்வு செய்து, அதுதொடர்பான தனது பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.






3 Comments