தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய சட்டம்–ஒழுங்கு தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் திங்கள்கிழமை நடைபெறும் பதிலுரையில் விரிவாக விளக்கம் அளிப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
விவாதத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சட்டம்–ஒழுங்கு தொடர்பாக தாம் முன்வைக்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் உரிய பதில் அளிப்பார் என்ற நம்பிக்கையுடன் தனது உரையைத் தொடங்குவதாகக் கூறினார்.
தற்போதைய ஆட்சியில் சட்டம் இருப்பதாகத் தெரிந்தாலும், சட்டம்–ஒழுங்கு நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுவதாகவும், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அரசுக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை தாம் எழுப்பிய சில கேள்விகளுக்கு முதலமைச்சருக்குப் பதிலாக பிற அமைச்சர்கள் பதிலளிப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவரிடமே கேள்விகளை எழுப்புவதாகக் குறிப்பிட்ட அவர், பதிலுரைக்கு மூன்று நாட்கள் இருப்பதால் உரிய முறையில் தயாராகி வருமாறும் கூறினார்.
இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஜெ.சி.டி. பிரபாகர், முதலமைச்சர் ஏற்கனவே தயாரான நிலையிலேயே சட்டப்பேரவைக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
மேலும், முன்னைய ஆட்சிக் காலத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அமல்ராஜ் ஐ.பி.எஸ். தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்தும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் திங்கள்கிழமை நடைபெறும் பதிலுரையின்போது தெளிவான விளக்கம் அளிப்பேன் எனத் தெரிவித்தார்.
தாம் அவையில் இல்லாத நேரத்திலும் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் தமக்குத் தெரியவரும் என்றும், அவற்றுக்கும் உரிய பதில் அளிப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.
அப்போது, “யாரும் எழுந்து வெளியேறிவிடக் கூடாது” என முதலமைச்சர் விஜய் தெரிவித்ததைத் தொடர்ந்து, த.வெ.க. உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர். இதன்பின்னர் முதலமைச்சர் விஜய் அவையில் இருந்து வெளியேறினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “சட்டப்பேரவையில் இருந்து தற்போது யார் வெளியேறினார் என்பது அனைவருக்கும் தெரியும்” எனக் குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சர் மூன்று நாட்கள் தயாராகி வந்து பதிலளிக்க வேண்டும் என்றே தாம் முன்னதாகக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.






3 Comments