பீகாரில் 2001ஆம் ஆண்டு பட்டப்பகலில் ஒருவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கு எதிரான வழக்கில், காவல்துறை தாக்கல் செய்த ஆதாரங்களை விசாரணை நீதிமன்றமும் பாட்னா உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொண்ட நிலையில், உச்சநீதிமன்றம் அவற்றை நிராகரித்து குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்துள்ளது.
இந்த வழக்கில் காவல்துறை நடத்திய விசாரணை குறித்து கடுமையான அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், இது ‘தவறான விசாரணை’ அல்ல; ‘விசாரணையே நடைபெறாத வழக்கு’ எனக் குறிப்பிட்டுள்ளது.
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கில் நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், நேரில் பார்த்ததாகக் கூறப்படும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் நம்பிக்கை அளிக்கவில்லை என்றும் தெரிவித்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. அந்தத் தீர்ப்பை பாட்னா உயர்நீதிமன்றமும் 2015ஆம் ஆண்டு உறுதி செய்திருந்தது. இதனையடுத்து, மற்ற ஐந்து பேரும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணை அதிகாரியின் அலட்சியம் அல்லது காவல்துறையினருடன் கூட்டுச் சேர்ந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் குற்றத்தை நீதிமன்றம் ஊகிக்க முடியாது எனத் தெரிவித்தது.
மேலும், விசாரணை முறையாக நடைபெறாததை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்றாலும், வழக்கில் நம்பகமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் அவர்களை குற்றவாளிகள் எனக் கருத முடியாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்து, வழக்கின் ஆதாரங்களை மதிப்பிடும்போது விசாரணை நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் நம்பகமான ஆதாரங்களையும் நம்பகமற்ற ஆதாரங்களையும் உரிய முறையில் பிரித்தறியத் தவறியிருக்கக்கூடும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.






3 Comments