கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் காணப்படுவதாக துறைமுக பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் துறைமுக பொறியியலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2020–2022 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 2025 ஜனவரி 3ஆம் திகதியளவில் நிறைவடைய வேண்டியிருந்த போதிலும், காலக்கெடு கடந்தும் பணிகள் நிறைவடையவில்லை என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
திட்ட முகாமைத்துவப் பிரிவும் ஆலோசனைக் குழுவும் தனித்தனியாகச் செயற்பட வேண்டிய நிலையில், ஒரே தரப்பினர் இரு பிரிவுகளிலும் செயற்படுவதாகவும், இதனால் திட்டத்தின் பக்கச்சார்பற்ற தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்திற்கு இதுவரை நிரந்தர பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்றும், அமைச்சரவை அனுமதியின்றி திட்டக் காலம் மூன்று முறை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சில கொடுப்பனவுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுவதாகவும், துறைமுக அதிகார சபையின் முறையான அனுமதியின்றி கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் துறைமுக அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்தி, திட்டத்தின் பணிகள் மற்றும் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.






3 Comments