நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சி.பி.எஸ்.இ. ஆன்-ஸ்கிரீன் மதிப்பீட்டு குளறுபடிகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் ‘ஐடியா எக்ஸ்சேஞ்ச்’ நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், கல்வி அமைச்சர் இந்த விவகாரத்திலிருந்து விலகிச் செல்லாமல், பிரச்சினைகளைச் சரிசெய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.
தன்னாட்சி அமைப்புகளில் ஏற்படும் தவறுகளுக்கும் அமைச்சரின் நேரடி செயல்பாடுகளுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக சுட்டிக்காட்டிய ரிஜிஜு, அமைச்சர் அல்லது அவரது அலுவலக ஊழியர்கள் தொடர்புடைய முறைகேடு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே பதவி விலகல் கோரிக்கை நியாயமானதாக இருக்கும் என்றார்.
சி.பி.எஸ்.இ. மற்றும் தேசிய தேர்வாணையம் (NTA) ஆகியவை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகள் என்றும், அவற்றின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகளை அமைச்சர்கள் நேரடியாகக் கண்காணிப்பதில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
கடந்த காலங்களில் ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமைச்சர்கள் மீது நேரடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோது ராஜினாமா கோரப்பட்டதாக நினைவூட்டிய அவர், தற்போதைய நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என்றார்.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கனவே தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த ரிஜிஜு, அமைச்சர்கள் பொறுப்பிலிருந்து விலகிச் செல்வதை விட பிரச்சினைகளைத் தீர்ப்பதே முக்கியம் என வலியுறுத்தினார்.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் தேர்வு முறைகளை சீரமைக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் வினாத்தாள் கசிவுகளைத் தடுக்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கில் சி.பி.எஸ்.இ. வாரியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பதவிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலும் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்துவது அரசியல் நோக்கம் கொண்ட செயலாகும் எனக் கூறிய கிரண் ரிஜிஜு, தவறு எங்கு நடந்திருந்தாலும் அதனைச் சரிசெய்து கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.






3 Comments