கடந்த 1996 ஆம் ஆண்டு ஒளிபரப்பான வீரப்பன் நேர்காணலில் நடிகை சுகன்யா குறித்து வெளியிடப்பட்ட அவதூறான கருத்துகள் தொடர்பாக, அவருக்கு ரூ.10.01 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கீழ்நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி கே. குமரேஷ் பாபு, கீழ்நீதிமன்ற தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
1996 ஏப்ரல் 17 ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பான ‘நேருக்குநேர்’ நிகழ்ச்சியில், நக்கீரன் ஆசிரியர் ஆர்.ஆர். கோபால் மேற்கொண்ட வீரப்பன் நேர்காணல் வெளியிடப்பட்டது. அதில் நடிகை சுகன்யா குறித்து வீரப்பன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் அவதூறானவை என சுகன்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த ஒளிபரப்பால் தனது நற்பெயர், சமூக அந்தஸ்து மற்றும் திரைப்பட வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதுடன், கடுமையான மன உளைச்சலும் ஏற்பட்டதாக சுகன்யா தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை சிவில் நீதிமன்றம், 2015 ஆம் ஆண்டு சுகன்யாவுக்கு ரூ.10,00,500 இழப்பீடு வழங்கவும், அவதூறான பகுதிகளை மீண்டும் ஒளிபரப்பத் தடை விதிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சன் டிவிக்கு நிகழ்ச்சியைத் திருத்தவும், நீக்கவும், மாற்றியமைக்கவும் முழு அதிகாரம் இருந்த போதிலும், ஒளிபரப்புக்கு முன் தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கத் தவறியுள்ளதாக உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மேலும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடிகை சுகன்யாவிடமோ அல்லது வேறு தரப்பினரிடமோ விளக்கம் கோர எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
அதேவேளை, சன் டிவி தனது வருத்தத்தை தனது சொந்த தொலைக்காட்சி சேனலில் வெளியிடாமல், ஒரு தமிழ் நாளிதழில் மட்டும் வெளியிட்டதையும் நீதிமன்றம் விமர்சித்தது. அவதூறை பார்த்த பார்வையாளர்களை நேரடியாகச் சென்றடையக்கூடிய வாய்ப்பு இருந்தபோதிலும், அதனை பயன்படுத்தாதது கேள்விகளை எழுப்புவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
சன் டிவி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், ஒளிபரப்பான உள்ளடக்கத்திற்கு சன் டிவி பொறுப்பேற்க வேண்டும் என்றும், நேர்காணல் மூலம் வணிக ரீதியாகவும் பயனடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டது.
இதனையடுத்து, சுகன்யாவுக்கு ரூ.10.01 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கீழ்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததுடன், குறித்த அவதூறான பகுதிகளை மீண்டும் ஒளிபரப்பக் கூடாது என்ற நிரந்தரத் தடை உத்தரவும் தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.






3 Comments