தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற த.வெ.க. பதவியேற்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதுகுறித்த முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அக்கட்சிக்கு இல்லாததால், ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் நேற்று (மே 6) நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், இன்று காலை வரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படாததால் மீண்டும் ஆளுநரை விஜய் சந்தித்துப் பேசினார். ஆளுநர் தரப்பில் பெரும்பான்மைக்கு தேவையான 118 பேர் பட்டியல் கோரப்பட்டதாகவும், ஆட்சி அமைத்த பிறகு பேரவையில் நிரூபிக்கிறோம் என்று த.வெ.க தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2-வது நாளாக இன்று ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய் மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், 113 (காங்கிரஸ் சேர்த்து) உறுப்பினர்களை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி அமைக்கப் போகிறீர்கள்? என்று ஆளுநர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் 1 தொகுதியில் ராஜிநாமா செய்யும் பட்சத்தில், பெரும்பான்மை எட்ட இன்னும் 6 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படும், எந்தெந்த கட்சிகள் ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறது? என்றும் ஆளுநர் விளக்கம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு விஜய்யும், தவெக நிர்வாகிகளும் விளக்கமளித்ததாகவும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.






3 Comments