தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) 234 தொகுதிகளில் 108 இடங்களில் அபார வெற்றியைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தி.மு.க உடன் கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ் அதன் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை வழங்கி இருக்கிறது
தற்போது த.வெ.க-வுக்கு 113 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கும் நிலையில், இன்னும் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த சூழலில், த.வெ.க கட்சிக்கு இதுவரை தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அக்கட்சி ஆட்சியமைப்பதில் தாமதம் நீடித்து வருகிறது. இதனால். த.வெ.க தலைவர் விஜய் பதவியேற்பு விழா தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பதற்கு ஆதரவு கோரி அ.தி.மு.க., தி.மு.க.-விடம் திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அ.தி.மு.க.-வின் இந்தக் கோரிக்கையை தி.மு.க. தலைமை சற்றும் பொருட்படுத்தவில்லை என்றும் 'தி இந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. மக்களின் தேர்தல் தீர்ப்பிற்கு எதிராகச் செயல்படத் தங்களுக்கு விருப்பமில்லை என்பதால், "எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதில் உறுதியாக இருப்பதாக" அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறது.
அ.தி.மு.க - தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக ஆங்கில ஊடகத்துக்கு தி.மு.க செய்தித் தொடர்பாளர் ஏ. சரவணன் விளக்கம் அளித்து இருந்தார். அதில், "அ.தி.மு.க-வுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை," என்று அவர் கூறியிருக்கிறார்.
இ.பி.எஸ் அதிரடி ரியாக்சன்
இந்த நிலையில், அ.தி.மு.க - தி.மு.க கூட்டணி அமைக்கப்போவதாக வெளியான செய்திகளுக்கு கடும் எதிர்வினையாற்றி இருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "அ.இ.அ.தி.மு.க எனும் பெரியக்கத்தின் நிரந்தர எதிரி தி.மு.க" எனக் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அந்தப் பதிவில், "ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மலிவான விளம்பரம் தேடும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் கட்சியால் பலன் கிடைக்கும் என்ற இந்த நாலாந்தர செயல்களை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். நாலாந்தர கும்பல்களின் நாலாந்தர செயல்களை புறந்தள்ளி நடைபோடுவோம். நம் இலக்கு தமிழகத்தின் வளர்ச்சி ஒன்றே." என்றும் அவர் கூறியிருக்கிறார்.Â
தி.மு.க எதிர்க்கட்சியாகவே செயல்படும் - கலாநிதி வீராசாமி
இதனிடையே, தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "காங்கிரஸின் துரோகத்தையும் மீறி, திமுக ஒரு திறமையான எதிர்க்கட்சியாகச் செயல்பட முடிவு செய்துள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சியமைப்பதை அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் தொடர்ந்து தடுத்து வருகிறது. இது மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாகும். ஜனநாயகம் வெல்லும் என நம்புகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.






3 Comments