சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதல்வர் உட்பட 31 அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளது தி.மு.க வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆளும் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியைத் தரும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழக அமைச்சரவையில் உள்ள 34 அமைச்சர்களில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட 31 பேர் தற்போதைய நிலவரப்படி தங்களது தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக, பல முக்கியத் தொகுதிகளில் தி.மு.க அமைச்சர்கள் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி வாரியான நிலவரப்படி, காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட மூத்த அமைச்சர் துரைமுருகன் மற்றும் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட ஏ.வ. வேலு ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். தலைநகர் சென்னையிலும் ஆளும் கட்சிக்குச் சாதகமான சூழல் தென்படவில்லை. துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர் பாபுவும், சைதாப்பேட்டை தொகுதியில் மா. சுப்பிரமணியனும் பின்தங்கியுள்ளனர். தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை, தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவனும், மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் பின்னடைவில் உள்ளவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல், திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கோவி. செழியன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். மன்னார்குடி தொகுதியில் தொடர் வெற்றிகளைப் பெற்று வந்த டிஆர்பி ராஜாவும் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளார்; அங்கு அமமுக வேட்பாளர் காமராஜ் முன்னிலை பெற்று வருகிறார்.
சென்னை உள்ளிட்ட முக்கிய மண்டலங்களில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வரும் சூழலில், திமுக அமைச்சர்களின் இந்தத் தொடர் பின்னடைவு ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைக் குறிப்பதாகத் தெரிகிறது. இதுவரை வெளியான முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில், பெரும்பாலான அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகக் கடுமையாகப் போராடி வரும் சூழல் நிலவுகிறது. திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இடங்களிலேயே அமைச்சர்கள் பின்தங்கியிருப்பது அண்ணா அறிவாலய வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






3 Comments