மயிலாப்பூர் தி.மு.க வேட்பாளரிடம் ரூ.50 லட்சம் பெற்றதாக வெளியான செய்திக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
மயிலாப்பூர் தொகுதி தி.மு.க வேட்பாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பணம் பெற்றதாக வெளியான செய்திக்கு, அக்கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் கடும் மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாப்பூர் மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டில் 1.50 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுத்ததற்கான கணக்கு இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. குறிப்பாக, அதில் சி.பி.எம் கட்சிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக மாலை முரசு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தத் தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக மறுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
தேர்தல் பணிகளுக்காக கூட்டணி கட்சிகளிடம் இருந்து ஒருபோதும் பணம் வாங்கும் வழக்கம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிடையாது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கூட்டணி கட்சிகளுக்காகத் தேர்தல் வேலைகளைச் செய்தாலும், கட்சித் தோழர்களுக்கான உணவு மற்றும் தேநீர் உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளைக் கூட தங்களது சொந்தச் செலவிலேயே செய்து கொள்வதாகவும், வேட்பாளர்களின் செலவில் எதையும் பெறுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தென்சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 தொகுதிகளிலும் கடும் வெயிலைப் பொருட்படுத்தாமல், எந்தவித எதிர்பார்ப்புமின்றி தேனீக்களைப் போல கட்சித் தொண்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த உண்மை திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கும் நன்கு தெரியும். அர்ப்பணிப்போடு தூய்மையான முறையில் பணியாற்றி வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மீது இத்தகைய அவதூறுகளைப் பரப்புவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, உண்மைக்கு மாறான இச்செய்தியை வெளியிட்ட மாலை முரசு நாளிதழும், சம்பந்தப்பட்ட நபர்களும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இந்த மறுப்புச் செய்தியை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது மானநஷ்ட வழக்குத் தொடரப்படும் என்றும் அந்த அறிக்கையில் ஆர்.வேல்முருகன் எச்சரித்துள்ளார்.






3 Comments