திருச்சூர் மாவட்டம் முண்டாதிகோட்டில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளா அரசு புதன்கிழமை இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.
அதிகாரிகள் தெரிவித்ததின்படி, சம்பவ இடத்தில் அடையாளம் தெரியாத பல உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல், திருவம்பாடி கோயில் நிர்வாகத்தின் சார்பில் திருச்சூர் பூரம் நிகழ்ச்சிக்கான மாதிரி காட்சிக்காக பட்டாசுகள் தயாரிக்கும் போது இந்த தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் இழப்பீடு மற்றும் விசாரணை தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன.
விசாரணைக்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சி.என். ராமச்சந்திரன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விபத்தின் காரணங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இழப்பீடு தொகையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (SDRF) ரூ.4 லட்சமும், முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (CMDRF) ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களுக்கு SDRF விதிமுறைகளின்படி நிவாரணமும், CMDRF மூலம் கூடுதல் ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை “மாநில சார்ந்த பேரழிவு” என கேரள அரசு வகைப்படுத்தியுள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் மருத்துவ சிகிச்சை செலவுகள் ஆறு மாதங்களுக்கு அரசால் ஏற்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments