அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீட்டிக்க வேண்டாம் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி அனுப்பிய கடிதத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகத் தெரிவித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு
இதயப் பிரச்சினைகள் காரணமாக சுரேஷ் சலேவுக்கு இதயக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில், தேசிய வைத்தியசாலையிலிருந்து அவரை மீண்டும் தடுப்புக் காவலுக்கு மாற்றுவது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, சுரேஷ் சலேவை நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விளக்கமறியல் காவலுக்கு மாற்றி, அவருக்குத் தேவையான சிறப்பு மருத்துவச் சிகிச்சையைத் தொடர்ந்து வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சுரேஷ் சலேவோ அவரது குடும்பத்தினரோ விசாரணைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்த மாட்டார்கள் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவரது மனைவி உறுதியளித்துள்ளார்






3 Comments