கணேமுல்ல சஞ்ஜீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு DNA மற்றும் முக அடையாளப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பரிசோதனை அறிக்கைகளும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் நேற்று இந்தத் தகவல்களை வெளியிட்டனர்.
இதனையடுத்து, இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
முக அடையாளப் பரிசோதனை
நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்த கொழும்பு குற்றப் பிரிவினர், கடந்த 17ஆம் திகதி இஷாரா செவ்வந்தி முக அடையாளப் பரிசோதனைக்காக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இதன்போது, அவரிடமிருந்து DNA மாதிரிகள் மற்றும் புகைப்படப் பதிவுகள் பெறப்பட்டதுடன், காணொளிக் காட்சிகளும் பரிசோதனைக்காக வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பட்டுவத்தையைச் சேர்ந்த சாமர மற்றும் கம்பஹா ஒஸ்மான் ஆகியோருக்கான தடுப்புக் காவல் உத்தரவு கடந்த 13ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
இதனால், அவர்கள் இருவரையும் மேலும் 90 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணம் வழியாக மன்னாருக்குத் தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் 41 மற்றும் 42ஆவது சந்தேக நபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.






3 Comments