மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவனை பலிகொடுத்து புதையல் தோண்ட முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 9 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய சிறுவனை அவரது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 31ஆம் திகதி இரவு, மண்முனை பிரதான வீதியில் உள்ள ஆலயம் அருகிலுள்ள காணியில் புதையல் தோண்டும் செயற்பாடு இடம்பெறுவதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மொரட்டுவை, கட்டுகஸ்தோட்டை மற்றும் இங்கிரியகொட பகுதிகளைச் சேர்ந்த 9 பேரைக் கைது செய்ததுடன் பூசைப் பொருட்களையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பொலன்னறுவை சேர்ந்த 16 வயதுச் சிறுவனும் ஒருவர் ஆவார் சிறுவன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, “இச்சிறுவன் தனது குடும்பத்தில் மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு பிறந்த முதல் ஆண்பிள்ளை என்றும், ஜாதக அடிப்படையில் இவரைப் பலிகொடுத்து புதையல் எடுக்க திட்டமிட்டு கடத்தி வரப்பட்டுள்ளார்” என நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கவும், சிறுவனின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.






3 Comments