வவுனியா தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்து இன்று தாண்டிக்குளம் பகுதியைச் கடந்துகொண்டிருந்த போது அங்குள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையைக் கடக்க முயன்ற முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
தொடருந்து மோதிய வேகத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளில் தொடர்ச்சியாக இவ்வாறான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.






3 Comments