யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்றுச் சின்னமான நல்லூர் மந்திரிமனை அழிவின் விளிம்பில் இருப்பதாக எச்சரித்துள்ள சி.வீ.கே. சிவஞானம், அதனை அவசரமாக புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவித்ததாவது, நல்லூர் மந்திரிமனையின் ஒரு பகுதி சமீபத்திய மழையால் ஏற்கனவே இடிந்து விழுந்துள்ளதாகவும், இன்னும் ஒரு மழை ஏற்பட்டால் முழு கட்டிடமும் இடிந்து போகும் அபாயம் நிலவுவதாகவும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்த வரலாற்றுச் சின்னம் பாராமுகத்தால் அழிந்து விட அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும், மந்திரிமனை தற்போது நம்பிக்கை பொறுப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறிய அவர், அவர்கள் விரைவாக முடிவு எடுத்து புனரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நிதி பற்றாக்குறை இருப்பதாக முன்பு தெரிவித்திருந்த போதிலும், தேவையான நிதி உதவியை வழங்கத் தயார் எனவும் அவர் உறுதியளித்தார்.
அதேவேளை, நம்பிக்கை பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், தொல்லியல் திணைக்களத்துக்கு பொறுப்பு வழங்கி, அவர்களுடன் இணைந்து சிறப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இரண்டு வாரங்களுக்குள் தெளிவான தீர்வு எடுக்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் யாழ்ப்பாண தமிழ் மன்னர்களின் முக்கியமான வரலாற்றுச் சின்னம் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.






3 Comments