நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் டீசல் விலை மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை 50 சதவீதம் வரை மட்டுப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், தொடர்ச்சியான நட்ட நிலை காரணமாக தற்போதைய முறையில் பேருந்து சேவைகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
இதன் காரணமாக பேருந்து கால அட்டவணைகளில் மாற்றம் செய்து, பயண சேவைகளின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவோ அல்லது அதற்கு பொறுப்பான அமைச்சரோ இதுவரை எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை எனவும் கெமுனு விஜேரத்ன குற்றஞ்சாட்டினார்.
இந்த மாத இறுதியில் டீசல் விலை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், வருடாந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் பேருந்து கட்டணங்கள் 20 முதல் 25 சதவீதம் வரை உயரக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது நாட்டில் சுமார் 25 சதவீத தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என தெரிவித்த அவர், சில பேருந்துகள் மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படுவதாகவும் கூறினார். அவ்வாறு செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட போதிலும், அந்த அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆரம்பத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து சேவைகளில் இருந்து முழுமையாக விலகத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தற்போது சேவைகளை 50 சதவீதம் வரை மட்டுப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வலியுறுத்திய கெமுனு விஜேரத்ன, தற்போதைய நிலைமையில் மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.






3 Comments