மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே காவலில் வைக்கப்பட்டு நடத்தப்படும் விதம் தொடர்பில் அவரது சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கவலைகளும், தற்போது ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்களும் பெரும் அதிர்ச்சியளிப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சுரேஷ் சல்லே நீதவானின் விளக்கமறியல் உத்தரவின் கீழ் அல்லாது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக பல ஆண்டுகளாக குரல் கொடுத்த சில செயற்பாட்டாளர்கள் தற்போது மௌனம் காத்து வருவது ஆச்சரியமளிப்பதாகவும், இந்த நிலைமை அவர்களின் கொள்கை நிலைப்பாடுகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை குறித்து கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, அந்த நீதி அரசியல் செல்வாக்கோ, பக்கச்சார்போ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறையோ இன்றி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உண்மையை அடிப்படையாகக் கொள்ளாமல் அரசியல் உள்நோக்கத்துடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், அது தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இழைக்கப்படும் துரோகமாக மாறும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தனது கண்டறிதல்களை தெளிவாக வெளிப்படுத்தியதுடன், அலட்சியத்திற்குப் பொறுப்பானவர்களையும் அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சிலரே தற்போது விசாரணைகளை வழிநடத்துவது முரண்பாடான நிலையை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி என்ற வகையில் விசாரணைகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், பொறுப்புக்கூறல் அவசியமானதுதான் என்றும் தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ, அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் ஒருபோதும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதியை வழங்காது என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.






3 Comments