குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மேற்கொண்டு வரும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அவர் எதிர்நோக்கும் சித்திரவதைகள் தொடர்பில் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
எதுல்கோட்டேயில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்தக் கைது ஜனாதிபதியின் தனிப்பட்ட உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்தக் கைது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, சி.ஐ.டி. காவலில் தமக்கு இழைக்கப்படுவதாகக் கூறப்படும் மனிதாபிமானமற்ற நடத்தைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், சுரேஷ் சலே கடந்த இரவு முதல் உணவு, குடிநீர் மற்றும் மருந்துகளை முற்றாகத் தவிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக கம்மன்பில குறிப்பிட்டார்.
மேலும், அவருக்கு வழங்கப்பட்ட உணவு மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும், ஒரு கரண்டி சோறும் முள்ளங்கி சொதியும் மட்டுமே வழங்கப்பட்டதுடன், அவை பழைய பத்திரிகைத் தாளில் வைத்து வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இதன் காரணமாக உணவு நிலத்தில் சிதறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவங்களால் மனரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுரேஷ் சலே, தன்னை நாயை விட மோசமாக நடத்துவதாக தனது மகனிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளதாகவும் உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.






3 Comments